அலகிட்டு வாய்ப்பாடு எழுதுதல் 3 மதிப்பெண்கள்
1. கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளை ஏழு சீர்கள் வருமாறு வரிசைப்படுத்தி எழுதவும்.
2.ஒவ்வொரு சீரிலும் உள்ள மெய் எழுத்துக்கள் மீது செங்குத்தாகக் கோடிட்டுப் பிரிக்கவும்
3.சீர்களில் முதல் எழுத்தை நோக்கவும். குறிலாக இருந்தால் உடன் ஓர் எழுத்தைச் சேர்த்துக்கொண்டு செங்குத்தாகக் கோடிட்டுப் பிரிக்கவும்
4.முதல் எழுத்து நெடிலாக இருந்தால் உடனே செங்குத்துக் கோடிட்டுப் பிரிக்கவும்.
5.கோடிடுதல் முடிந்த பின்னர் குறிலா? நெடிலா? என்பதைக் கவனத்தில் கொள்ளாது மறந்து விடவும்.
6.செங்குத்துக் கோடுகளுக்கு இடையே ஒரு எழுத்து இருந்தால் ஒன்று எனவும் இரண்டு எழுத்து இருந்தால் இரண்டு எனவும் எழுதவும். இரண்டுக்கு மேல் எழுத்து இருந்தால் மேலே கூறிய முறையில் கோடிடுதலைச் செய்யவும்.
7.ஒன்று எனில் நேர் என்றும் இரண்டு எனில் நிரை என்றும் எழுதவும்
8.விடைத்தாளின் அடிப்பக்கத்தில் இதே செயல்முறையைத் “தேமா புளிமா கருவிளம் கூவிளம்” ஆகிய நான்கு சொற்களுக்கும் செய்து வைத்துக் கொள்ளவும்.
9.இப்போது ஒவ்வொரு சீருக்கும் நேரே எழுதப்பட்ட “நேர்-நிரை” அசைகளையும் “தேமா புளிமா கருவிளம் கூவிளம்” ஆகியவற்றுக்கு நேரே எழுதப்பட்ட அசைகளையும் ஒப்பிடவும்.
10.எந்த ஒன்றுடன் பொருந்துகிறதோ அதற்கு இடப்புறம் உள்ள “தேமா புளிமா கருவிளம் கூவிளம்” இதில் ஒன்றுதான் அந்தச் சீரின் வாய்ப்பாடு ஆகும்.
11.மூவசைச் சீராக இருந்தால் மூன்றாவது அசை ‘நேர்’ அசையாக மட்டுமே இருக்கும். அதனால் வாய்ப்பாடுடன் ‘காய்’ சேர்த்துக் கொள்ளவும். இப்போது தேமா=>தேமாங்காய், புளிமா=>புளிமாங்காய், கருவிளம்=>கருவிளங்காய், கூவிளம்=>கூவிளங்காய் என்று ஆகும்.
12.ஏழாவது சீருக்கு மட்டும் விடைத்தாளின் அடிப் பக்கத்தில் “நாள் மலர் காசு பிறப்பு” ஆகிய சொற்களை எழுதி மேற்கூறிய முறைகளில் கோடிட்டுப் பிரித்து நேர்-நிரை எழுதி வைத்துக்கொள்ளவும்.
13.ஏழாவது சீரின் அசைகளையும் “நாள் மலர் காசு பிறப்பு” இவற்றின் அசைகளையும் ஒப்பிட்டு அதன் வாய்ப்பாடு எழுதவும்