சிறப்புடைய இடுகை

நிகழ்கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நிகழ்கலை

 2 மதிப்பெண்

"நேற்று நான் பார்த்த 'அருச்சுனன் தபசு' என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!" என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற் கூற்றாக எழுதுக.

அயற்கூற்று:

முன்தினம் அவன் பார்த்த 'அருச்சுனன் தபசு' என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்ததாகச் சேகர் என்னிடம் கூறினான்.

3 மதிப்பெண்

படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்துகலை குறித்து இரண்டு வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் எழுதுக.

அ). தேவராட்டம் - குறிப்பு வரைக.

  1. 'தேவதுந்துபி' தேவராட்டத்திற்கான இசைக்கருவி ஆகும்.  
  2. வேட்டி கட்டியும் தலையிலும் இடையிலும் சிறிய துணி கட்டியும் காலில் சலங்கை அணிந்தும் எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகிறது. 

ஆ). கரகாட்டம் குறித்து எழுதுக.

  1. பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்று கரகாட்டம். 
  2. 'கரகம்' என்பது பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம்.

8 மதிப்பெண்

 நிகழ்கலை வடிவங்கள்- அவை நிகழும் இடங்கள் - அவற்றின் ஒப்பனைகள் - சிறப்பும் பழைமையும் - இத்தகைய மக்கள் கலைகள் அருகி வருவதற்கான காரணங்கள் - அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன - இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.

தலைப்பு : நிகழ்த்துக் கலைகள்

மனிதனின் அழகியல் வெளிப்பாடு கலையாகும். 

நிகழ்கலை வடிவங்கள்

நிகழ்த்துக் கலைகள் தெருக்கூத்து, தோற்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், பகல் வேடம், சேவையாட்டம், உடுக்கைப் பாட்டு, ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு, கரகாட்டம், காவடியாட்டம், குதிரை ஆட்டம், தேவராட்டம், கோலாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், சிலம்பாட்டம், புலி ஆட்டம் எனப் பல வடிவங்களில் நிகழ்த்தப்படுகின்றது. 

நிகழ்விடங்கள்

நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகளை நிகழ்த்துவதற்கென்று குறிப்பிட்ட இடமோ, களமோ, அரங்கமோ கிடையாது. எங்கு வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் (கோயில், ஊர்மந்தை, தெருக்கள்) நிகழ்த்திக் கொள்ளும் சுதந்திரப் போக்கைக் கொண்டவையாகும். 

ஒப்பனைகள்

  1. கலைஞர்கள் தங்களைத் தாங்களே ஒப்பனை செய்து கொள்கின்றனர். 
  2. ஒரு கலைஞர் தமது குழுவினருக்கு ஒப்பனை செய்வதும் உண்டு. 
  3. கலைஞர்களின் உடையலங்காரமும் முகப் பூச்சுமே பார்வையாளர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. 

நிகழ்த்துக் கலைகளின் சிறப்பு 

  1. இவை கற்றோராலும் மற்றோராலும் விரும்பப்படும் கலைகளாக உள்ளன.
  2. உழைப்பாளர்களின் உணர்வுகளாக உள்ளன.
  3. மக்களுக்கு மகிழ்ச்சி என்னும் கனி கொடுத்து கவலையைப் போக்குகின்றன.  
  4. சமய வழிபாட்டிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்கமுடியாத பண்பாட்டுக் கூறுகளாக விளங்குகின்றன. 

நிகழ்த்துக் கலைகளின் பழமை

நிகழ்த்துக்கலைகள் தோன்றிய காலத்தை அறுதியிட்டுக் கூறுவது எளிதன்று. மக்களின் மத வழிபாடு மற்றும் சடங்குகளின் நீட்சியாக இக்கலைகள் வளர்ச்சி பெற்றன. 

மக்கள் கலைகள் அருகி வருவதற்கான காரணங்கள்

  1. இன்றைய காலகட்டத்தில் தகவல் தொடர்பிற்கும், பொழுது போக்கிற்கும் பல்வேறு ஊடகங்கள் உருவாகி வருகின்றன. 
  2.  நிகழ்த்துக்கலைகளுக்கான கருவிகள் மற்றும் உபகரணங்களின் விலை உயர்வு, இடைத்தரகர்களின் ஆதிக்கம், சாதி இறுக்கம், சமூக முன்னேற்றம் போன்றவையும் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
  3. போதிய அளவில் நிகழ்ச்சிகளும் வருமானமும் இல்லை என்பதால் கலைஞர்களும் வேறு தொழில்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர்

நிகழ்த்துக் கலைகளை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன:

  1. 'நிகழ்த்துக் கலைகள் - நமது பண்பாட்டின் விழுமியங்கள்' என்ற உணர்வை இளைஞர்களிடம் விதைக்க வேண்டும்.
  2. நிகழ்த்துக் கலைகளுக்கு முறையான அங்கீகாரமும் திறமைக்கேற்ற ஊதியமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  3. வழிபாடுகளில் நிகழ்த்துக் கலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  4. நிகழ்த்துக் கலைஞர்களின் மீதான சாதிய இறுக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
  5. மற்ற கலைஞர்களுக்கு வழங்கப்படுவது போலவே நிகழ்த்துக் கலைஞர்களுக்கும் விருதுகளும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட வேண்டும்.