சிறப்புடைய இடுகை

கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மின்வாரிய அலுவலருக்குக் கடிதம்

உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வதற்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி, ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர்

     அ. தமிழ்,

     6, திருவள்ளுவர் தெரு,

     சங்கரலிங்கபுரம்,

     விருதுநகர் (மாவட்டம்).

பெறுநர்

     மின்வாரிய அலுவலர்,

     மின்வாரிய அலுவலகம்,

     விருதுநகர்.

மதிப்பிற்குரிய ஐயா,

    பொருள்: பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றித் தர வேண்டுதல் குறித்து...

     வணக்கம்.  நான் மேற்கண்ட முகவரியில் நிரந்தரமாகக் குடியிருந்து வருகிறேன்.  எங்கள் தெருவில் சுமார் 100 வீடுகள் உள்ளன.  200 மீட்டர் நீளமுள்ள எங்கள் தெருவில் 4 மின் கம்பங்கள் உள்ளன.  அதில் இரண்டு மின் கம்பங்களில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்துள்ளன.  

     அந்தப் பகுதி இருட்டாக இருப்பதால் திருடர்கள் நடமாட்டம் இருக்கிறது;  நச்சு பூச்சிகளின் தொல்லையும் இருக்கின்றது.  இதனால், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் பெரும் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.

     இதனைத் தவிர்க்க, பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றித் தருமாறு வேண்டுகிறேன்.


இப்படிக்கு,

உண்மையுள்ள,

அ. தமிழ்


இடம் : சங்கரலிங்கபுரம்

நாள் : 24.09.2020


உறைமேல் முகவரி:

பெறுநர்

     மின்வாரிய அலுவலர்,

     மின்வாரிய அலுவலகம்,

     விருதுநகர்.

உறவினருக்குக் கடிதம்

பள்ளித் திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டும் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.


உறவினருக்குக் கடிதம்


விருதுநகர்,

12-10-2020.


அன்புள்ள அத்தைக்கு,

வணங்குகிறேன்.  இங்கு நானும் அப்பாவும் அம்மாவும் தம்பியும் நலமாக இருக்கிறோம்.  உங்களது நலம் மற்றும் மாமாவின் நலம் அறிய ஆவல்.  சிறுவயது முதலே எனக்கு நல்ல அறநெறிக் கதைகளைக் கூறி நல்வழிப்படுத்தினீர்கள்.  நீங்கள் கூறிய நன்னெறிப்படியே இதுவரை நான் ஒழுகி வந்துள்ளேன்.  அதனால் ஏற்பட்ட நன்மையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.  அதற்காகத் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

கடந்த திங்களன்று மதிய உணவு இடைவேளையில் உணவு அருந்துவதற்காக நானும் எனது நண்பனும் பள்ளித்திடல் அருகில் உள்ள வேப்ப மரத்தடிக்குச் சென்றோம்.  அங்கு ஒரு பணப்பையைக் கண்டேன். எடுத்துப் பார்த்தபோது அதில் சில இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளும் அடையாள அட்டைகளும் இருப்பதைக் கண்டேன்.  பணப்பையை தவறவிட்டவரின் மனம் எவ்வளவு துடித்திருக்கும் என்று எண்ணிப்பார்த்தேன்.  

ஆதார் அட்டையில் உள்ள தொலைபேசி எண்ணில் உரியவரைத் தொடர்பு கொண்டேன்.  உடன் பள்ளி தலைமையாசிரியர் அறைக்குச் சென்று நடந்ததைக் கூறினேன்; பணப்பையை ஒப்படைத்தேன்.  சிறிது நேரத்தில் உரியவர் வந்தார்.  சரியான அடையாளத்தைக் கூறிப் பணத்தை பெற்றுக் கொண்டார்; என்னை வாழ்த்திச் சென்றார்; தலைமையாசிரியரும் ஆசிரியப் பெருமக்களும் என்னைப் பாராட்டினார்கள்.  இந்த வாழ்த்துக்கெல்லாம் உரியவர் நீங்கள்தான்.  எனக்கு நீங்கள் சொல்லிக்கொடுத்த, "இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின்" என்ற திருக்குறள் எவ்வளவு உண்மையானது என்பதை உணர்ந்து மகிழ்ந்தேன்.  

நன்றி அத்தை!


தங்கள் அன்புள்ள,

தமிழன்


உறைமேல் முகவரி

பெறுநர்

     திருமதி. இந்துமதி,

     கம்பர் தெரு,

     இராஜபாளையம்.


கடிதம் பொங்கல் மலர்

 நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.


அனுப்புநர்

     அ. தமிழ்

     6, திருவள்ளுவர் தெரு,

     சங்கரலிங்கபுரம்,

     விருதுநகர் (மாவட்டம்).


பெறுநர்

     ஆசிரியர்,

     தினமணி,

     சென்னை.


மதிப்பிற்குரிய ஐயா,

     பொருள்: கட்டுரை வெளியிட வேண்டுதல்...


     வணக்கம்.  விருதுநகர் மாவட்டம், சங்கரலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன்.  தங்கள் நாளிதழின் பொங்கல் மலருக்காக 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற தலைப்பில் இரண்டு பக்க கட்டுரை எழுதி, இத்துடன் இணைத்துள்ளேன்.  வரும் பொங்கல் அன்று வெளிவரும் பொங்கல் மலரில், எனது கட்டுரையை வெளியிட வேண்டுகிறேன். நன்றி!


இப்படிக்கு,

உண்மையுள்ள,

அ. தமிழ்


இடம்: சங்கரலிங்கபுரம்

நாள் : 10.01.2021

இணைப்பு:

    (1). 'உழவு தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற தலைப்பிலான கட்டுரை

உறைமேல் முகவரி

பெறுநர்

     ஆசிரியர்,

     தினமணி,

     சென்னை

     

கடிதம் -உணவுப் பாதுகாப்பு ஆணையர்

உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவு பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

புகார்க் கடிதம்

அனுப்புநர்

அ. கபிலர்

6, ஔவையார் தெரு,

சங்கரலிங்கபுரம்,

விருதுநகர் (மாவட்டம்).

பெறுநர்

உயர்திரு. உணவுப் பாதுகாப்பு ஆணையர்,

உணவு பாதுகாப்பு ஆணையர் அலுவலகம்

சென்னை.


மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல்...

 

     வணக்கம். நான் நேற்று (22.09.2020) விருதுநகர் - மதுரை நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள முல்லை உணவு விடுதிக்குச் சென்றிருந்தேன். கோழி பிரியாணி ஒன்று வாங்கினேன். சாப்பிடும்போது உணவு கெட்டுப் போனதை அறிந்தேன்.

     உணவு விடுதி உரிமையாளரிடம், இதுகுறித்து முறையிட்டபோது "உன்னால் முடிந்ததைப் பார்" என்று மிரட்டினார். விலைப்பட்டியலில் கோழிப் பிரியாணி விலை ரூபாய் 120 என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால், என்னிடம் 180 ரூபாய் கேட்டார்.

     தரமற்ற உணவு வழங்கி, விலை கூடுதலாக வசூலித்த முல்லை உணவு விடுதி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 180 ரூபாய்க்கான உணவு கட்டணச் சீட்டின் ஒளிப்பட நகலை இத்துடன் இணைத்துள்ளேன்.

நன்றி!

இப்படிக்கு,

உண்மையுள்ள,

அ. கபிலர்.

இடம் : சங்கரலிங்கபுரம்.                                   

நாள் : 23.09.2020 

இணைப்பு:

உணவுக் கட்டணச் சீட்டின் ஒளிப்பட நகல்

உறைமேல் முகவரி:

பெறுநர்

உயர்திரு. உணவுப் பாதுகாப்பு ஆணையர்,

உணவு பாதுகாப்பு ஆணையர் அலுவலகம்,

சென்னை.



நண்பனுக்குக் கடிதம்

மாநில அளவில் நடைபெற்ற 'மரம் இயற்கையின் வரம்' என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக

பாராட்டுக் கடிதம்


சங்கரலிங்கபுரம்,

23-09-2020.


அன்புள்ள நண்பா,

              நலம்.  நலம் அறிய ஆவல்.  "தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று" என்ற பொய்யாமொழிப் புலவரின் வரிகளை மெய்யாக்கியவன் நீ. 'மரம் இயற்கையின் வரம்' எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றாய் என்பதை ஊடகங்கள் மூலம் அறிந்தேன்; உள்ளம் மகிழ்ந்தேன். 

            சுற்றுச்சூழல் ஆர்வலன் நீ. பசுமைக் காவலன் நீ.  உன்னுடைய கருத்தாழமும் கவிச் சிறப்பும் கட்டமைக்கும் பாங்கும் கட்டுரையில் நேர்த்தியை ஏற்படுத்துவன. உன்னுடைய வெற்றி தொடர வேண்டும்.  உன்னுடைய பதில் மடலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

அன்புள்ள நண்பன்,

எழிலன்

உறைமேல் முகவரி:

பெறுநர்

               தமிழன்

               6, தொல்காப்பியர் தெரு,

               ஒண்டிப்புலி நாயக்கனூர்,

               விருதுநகர் (மாவட்டம்).