2 மதிப்பெண்
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது'
அ).அடி எதுகையை எடுத்து எழுதுக.
ஆ)இலக்கணக் குறிப்பு எழுதுக.
கொள்க, குரைக்க.
விடை:
அ). அடியெதுகை:
கொள்வோர்
உள்வாய்
ஆ). இலக்கணக் குறிப்பு:
கொள்க, குரைக்க - வியங்கோள் வினைமுற்றுகள்
8 மதிப்பெண்
காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருள் என்செல்வம்
இவை சரி என்றால் இயம்புவது என் தொழில்
இவை தவறாயின் எதிர்ப்பது என் வேலை
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்
அவனும் யாருமே அறிந்தவை; அறிக!
- கண்ணதாசன்.
பாநயம் பாராட்டல்
காலக்கணிதம்
திரண்ட கருத்து
"நான் ஒரு கவிஞன். நானே காலத்தைக் கணிக்கும் வானசாத்திரமும் ஆவேன். மனத்தில் எழும் கருத்துக்களைக் கவிதையாகப் படைப்பேன். இந்தப் பூமியில், நானே புகழ்பெற்ற தெய்வமும் ஆவேன். என்னுடைய கவிதைகள் பொன்னை விட விலை மிகுந்தவை. நன்மை தரும் செயல்களைப் பாராட்டியும், தவறான செயல்களை எதிர்த்தும் கவிதை வடிப்பது என்னுடைய வேலை. இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைப் புரிகின்றான். நானும் கவிதையைப் படைத்தல், மக்களுக்கு நல்லறிவு புகட்டுதல், மக்களின் மனங்களில் உள்ள தீய சிந்தனைகளை அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்கின்றேன். அறிவீர்களாக!" என்று கண்ணதாசன் கவிதை பாடுகிறார்.
மையக்கருத்து
காலத்தைக் கணித்தும் முத்தொழில் புரிந்தும் இறைவனுக்குச் சமமான நிலையினைப் பெற்ற கவிஞனைப் புகழ்ந்துரைப்பது இப்பாடலின் மையக்கருத்து ஆகும்.
சொல் நயம்
'கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்'
என்ற பாடலடியில் சொல்நயம் மிகுந்து வந்துள்ளது.
பொருள் நயம்
"யானோர் காலக் கணிதம், கருப்படு பொருளை உருப்பட வைப்பேன், பொன்னினும் விலைமிகு பொருள் என்செல்வம்" ஆகிய சொற்கள் ஆழமான பொருள் உடையன. கவிதையின் மையக் கருத்துக்கு அழகு சேர்ப்பன.
சந்த நயம்
'சந்தம் செந்தமிழுக்கே சொந்தம்' என்பார்கள். வல்லோசையும் மெல்லோசையும் சேருமிடத்தில் சந்தநயம் பிறக்கிறது.
"புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருள் என் செல்வம்" என்ற கவிதை வரிகளில் இனிமையான சந்தநயம் பயின்று வந்துள்ளது.
தொடை நயம்
"தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்" என்பார்கள். இப்பாடலில் மோனை, எதுகை, முரண், இயைபு ஆகிய நான்கு தொடை நயங்களும் பயின்று வந்துள்ளன.
மோனை நயம்
கவிஞன்
கணிதம்
புவியில்
புகழுடைத்
என்ற இடங்களில் மோனை நயம் பயின்று வந்துள்ளது.
எதுகை நயம்
கருப்படு
பொருளை
உருப்படு
இவை சரியென்றால்
இவை தவறாயின்
என்ற இடங்களில் எதுகை நயம் பயின்று வந்துள்ளது.
முரண் நயம்
'ஆக்கல் ×அழித்தல், சரி×தவறு ' என்ற சொற்கள் முரண் சுவையைத் தருகின்றன.
இயைபு நயம்
கணிதம்
தெய்வம்
செல்வம்
என்ற இடங்களில் இயைபு நயம் பயின்று வந்துள்ளது.
அணிநயம்
இப்பாடலில் வந்துள்ள அணி 'உருவக அணி' ஆகும்.