உரைநடை உலகம் 8 மதிப்பெண்
1.செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்
முன்னுரை
ஒரு மனிதனைப் போன்றே உணர்வுப் பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும், தர்க்கரீதியிலும், தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் ஆற்றலை ஒரு இயந்திரம் பெறுவது என்ற வளர்ச்சிப் போக்கு சிக்கலான பல கேள்விகளை எழுப்புகின்றது. செயற்கை நுண்ணறிவு வணிகத்தோடு நின்று விடுமா? அல்லது சமூக நலனில் அக்கறை கொள்ளுமா? என்பதைப் பற்றி விவாதிப்போம், வாருங்கள்.
பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு
முன்னேறி வரும் தொழில்நுட்பங்கள் இந்த உலகில் மனிதனின் தேவையை வெகுவாகக் குறைத்து வருகிறது. மனிதன் கண்டுபிடித்த இயந்திரங்களில் - வேலைகளில் புகுந்து மனிதர்களை வெளியேற்றி வருகின்றன.
ஆசிரியராக...
செப்டம்பர் 2016-இல் நுழைந்துள்ள இங்கிலாந்தின் முதல் வகுப்பறை ரோபோ ஆசிரியர் பெப்பர் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
சமையல் கலைஞராக...
மோலி ரோபாட்டிக்ஸ் நிறுவனம் 100 சதவீதம் தானாக இயங்கும் புத்திசாலித்தனமான ரோபோ சமையல்காரரை உருவாக்கியுள்ளது
அறுவை சிகிச்சை நிபுணராக...
மருத்துவத் துறையில் அறுவைச் சிகிச்சையில் ரோபோக்கள் முன்னரே இருந்தாலும், தற்போது மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை, கண் அறுவைச் சிகிச்சை வரை முன்னேறியுள்ளன.
சில்லறை விற்பனையாளராக...
நெஸ்லே நிறுவனம் ஜப்பான் நாடு முழுக்க சுமார் 1000 மளிகை மற்றும் காபி கடைகளில் பெப்பர் ரோபோக்களை சில்லறை விற்பனையாளர் பணியில் பயன்படுத்தி வருகிறது.
பாதுகாவலராக...
பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் பாதுகாவலர் பணியில் ரோபோக்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கால்நடைப் பராமரிப்பாளராக...
ஆஸ்திரேலிய நிறுவனம் கால்நடைகளை மேய்க்கும் ரோபோவை உருவாக்கியுள்ளது.
உலகின் முதல் ரோபோ பண்ணை ஜப்பானில் உருவாகி வருகிறது. இங்குள்ள ரோபோக்கள் பயிர் நடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, அறுவடை செய்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செய்கின்றன.
மருந்தாளுநராக...
மருந்தாளுநர் பணியிலும் சமீபத்திய ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், மனிதத் தவறுகளால் ஏற்படும் இறப்புகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மின் வணிகத்தில்...
புதிய வணிக வாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு நல்குகிறது. பெருநிறுவனங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன. வணிகத்தில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை இவை பறைசாற்றுகின்றன.
எதிர்கால வெளிப்பாடுகள்
உள்ளீடு செய்யப்பட்ட மற்றும் திரட்டப்பட்ட மின்தரவுகளை ஆழ்நிலைக் கற்றலுக்கு உட்படுத்துவது, இயந்திரக் கற்றல் முறையின் மூலம் ஆராய்வது போன்ற தொழில்நுட்ப உத்திகளின் மூலம் செயற்கை நுண்ணறிவு சுயேச்சையான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு உயர்ந்து வருகிறது.
உயிரியல் துறையிலும் கணினித் துறையிலும் நடக்கும் ஆராய்ச்சிகள் ஒன்றை ஒன்று செழுமைப்படுத்தி முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் எட்டப்படும் மைல்கல்கள் ஒவ்வொன்றும் மனித மூளையைக் குறித்த புதிய புரிதல்களை ஏற்படுத்துவதோடு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அடைய வேண்டிய புதிய இலக்கையும் நிர்ணயிக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் இந்த வளர்ச்சிப் போக்குகள் அனைத்தும் மிக விரைவில் உணர்வு கொண்ட மனித இயந்திரங்களின் பயன்பாடு சாத்தியமே என்பதற்கு கட்டியம் கூறுகின்றன.
செயற்கை நுண்ணறிதிறன் தன் வளர்ச்சியின் ஊடாக உணர்வு சார்ந்த முடிவெடுக்கும் ஆற்றலை மெல்ல மெல்ல அடைந்து வருகின்றது. அத்தகைய உணர்வு சார்ந்த முடிவெடுக்கும் ஆற்றலால், ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த தேனீர் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளும் என்று நம்பலாம்.
முடிவுரை
செயற்கை நுண்ணறிவு நமது வாழ்க்கையையும் வணிகத்தையும் நம்மை அறியாமலேயே வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. அத்தகைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள நாம் அணியமாக இருக்க வேண்டும்.
2. நிகழ்த்துக் கலைகள்
முன்னுரை :
மனிதனின் அழகியல் வெளிப்பாடு கலையாகும். கலை என்பது பார்ப்போர் கேட்போர் மனத்தில் அழகியல் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் அந்தந்தப் பண்பாட்டுச் சூழலோடு வெளிப்படுத்தப்படுவது என்று தற்காலத் தமிழகராதி விளக்கமளிக்கிறது. இந்த அழகியல் உணர்வு வாழ்க்கை அனுபவத்திலிருந்து பெறப்பட்டுக் கலைத் தன்மையோடு நிகழ்த்திக் காட்டப்படுகிறது.
நிகழ்கலை வடிவங்கள்
மக்களின் முன் நிகழ்த்திக் காட்டும் வகையிலான கலைகளே நிகழ்த்துக் கலைகள் ஆகும். அவை ஆடலாகவோ, பாடலாகவோ, ஆடலும் பாடலும் இணைந்தோ, ஆடல் பாடல் உரையாடலுடன் கலந்தோ, ஒரு கலைஞராலோ, கலைஞர்கள் பலர் இணைந்தோ, ஒரு நிகழ்ச்சியையோ, கருத்தையோ, கதையையோ பார்வையாளர்கள் முன் நிகழ்த்திக் காட்டுவதாக அமையும். தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் நிகழ்த்துக் கலைகள் தெருக்கூத்து, தோற்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், பகல் வேடம், சேவையாட்டம், உடுக்கைப் பாட்டு, ஒயிலாட்டம், கணியான் கூத்து, வில்லுப்பாட்டு, கரகாட்டம், காவடியாட்டம், குதிரை ஆட்டம், தேவராட்டம், கோலாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், சிலம்பாட்டம், புலி ஆட்டம் எனப் பல வடிவங்களில் நிகழ்த்தப்படுகின்றது.
நிகழ்விடங்கள்
நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகளை நிகழ்த்துவதற்கென்று குறிப்பிட்ட இடமோ, களமோ, அரங்கமோ கிடையாது. எங்கு வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் (கோயில், ஊர்மந்தை, தெருக்கள்) நிகழ்த்திக் கொள்ளும் சுதந்திரப் போக்கைக் கொண்டவையாகும். சிறுதெய்வ வழிபாடுகளின் போது எங்கெல்லாம் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் கலைஞர்களும் சென்று ஆடுவார்கள்.
ஒப்பனைகள்
நிகழ்த்துக் கலைகளில் இசையும் ஒப்பனையும் இருகண்களாக விளங்குகின்றன. கரகாட்டத்தை இசையின்றி இரசிக்க இயலாது; அதேபோல், தெருக்கூத்தை ஒப்பனையின்றிப் பார்க்க இயலாது. நிகழ்த்துக் கலைகளின் வடிவங்களுக்கு ஏற்பவும், கதாபாத்திரத்திற்கு ஏற்பவும் கலைஞர்கள் தங்களைத் தாங்களே ஒப்பனை செய்து கொள்கின்றனர். ஒரு கலைஞர் தமது குழுவினருக்கு ஒப்பனை செய்வதும் உண்டு. கலைஞர்களின் உடையலங்காரமும் முகப் பூச்சுமே பார்வையாளர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. அதிகமான முகப் பூச்சு, பளபளப்பான ஜிகினா உடை, கதாநாயகர்கள் போன்ற தோற்றம் ஆகியவை நாட்டுப்புற நிகழ்த்துக் கலைஞர்களுக்கான பொது உடை ஒப்பனை முறையாகக் காணப்படுகிறது.
நிகழ்த்துக் கலைகளின் சிறப்பு
நிகழ்கலைகள் ஊரக மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கின்றன. இவை கற்றோராலும் மற்றோராலும் விரும்பப்படும் கலைகளாக உள்ளன; உழைப்பாளர்களின் உணர்வுகளாக உள்ளன; மக்களுக்கு மகிழ்ச்சி என்னும் கனி கொடுத்து கவலையைப் போக்குகின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் துணை செய்கின்றன; எண்ண வெளிப்பாடாக, வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியாக, மக்களின் சமய வழிபாட்டிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்கமுடியாத பண்பாட்டுக் கூறுகளாக விளங்குகின்றன.
நிகழ்த்துக் கலைகளின் பழமை
நிகழ்த்துக்கலைகள் தோன்றிய காலத்தை அறுதியிட்டுக் கூறுவது எளிதன்று. அவை மக்களின் வாழ்க்கைச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. மக்களின் மத வழிபாடு மற்றும் சடங்குகளின் நீட்சியாக இக்கலைகள் வளர்ச்சி பெற்றன. தொடக்கக் கால மனிதன் தான் கண்டவற்றைப் போலச்செய்தலாய் நிகழ்த்திக் காட்டி அதனை முறைப்படுத்திக் கலைவடிவம் ஆக்கினான்.
மக்கள் கலைகள் அருகி வருவதற்கான காரணங்கள்
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கின்றன. இதனால், தகவல் தொடர்பிற்கும், பொழுது போக்கிற்கும் பல்வேறு ஊடகங்கள் உருவாகி வருகின்றன. பொருளாதார வளர்ச்சி கோவில் சடங்குகளின் போக்கை மாற்றி இருக்கின்றது. கலைஞர்கள் மதுவுக்கு அடிமையாதல், சேமிப்புப் பழக்கமின்மை, அரசுச் சலுகைகள் பற்றிய அறியாமை, கலைகளுக்கான விருதுகளில் பாரபட்சம், நிகழ்த்துக்கலைகளுக்கான கருவிகள் மற்றும் உபகரணங்களின் விலை உயர்வு, இடைத்தரகர்களின் ஆதிக்கம், சாதி இறுக்கம், சமூக முன்னேற்றம் போன்றவையும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. போதிய அளவில் நிகழ்ச்சிகளும் வருமானமும் இல்லை என்பதால் கலைஞர்களும் வேறு தொழில்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர்.
நிகழ்த்துக் கலைகளை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன:
'நிகழ்த்துக் கலைகள் - நமது பண்பாட்டின் விழுமியங்கள்' என்ற உணர்வை இளைஞர்களிடம் விதைக்க வேண்டும். நிகழ்த்துக் கலைகளுக்கு முறையான அங்கீகாரமும் திறமைக்கேற்ற ஊதியமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வழிபாடுகளில் நிகழ்த்துக் கலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நிகழ்த்துக் கலைஞர்களின் மீதான சாதிய இறுக்கத்தைத் தவிர்க்க வேண்டும். மற்ற கலைஞர்களுக்கு வழங்கப்படுவது போலவே நிகழ்த்துக் கலைஞர்களுக்கும் விருதுகளும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட வேண்டும்.
முடிவுரை
தமிழரின் நீண்ட நெடிய வரலாற்றையும் பண்பாட்டுப்பெருமையையும் ஒருங்கே காட்டும் நிகழ்த்துக்கலைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுப்பது நமது கடமையாகும். இதனை உணர்ந்து நிகழ்த்துக் கலைகளை மீட்டெடுக்கும் பணியில் நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும்.
3.விருந்தோம்பல்
வரவேற்றேன்
எங்கள் ஊர்ப் பொங்கல் விழாவிற்கு என் மாமாவைத் தொலைபேசியில் அழைத்தேன்; அவர் வருகைக்காக வாயிலில் விழி வைத்துக் காத்திருந்தேன்; மதியவேளை வந்தது; அவரும் வந்தார். “வாங்க மாமா” என்று வாய் நிறைய அழைத்தேன்; முகம் மலர்ந்தேன்; கைபிடித்து உள்ளே கூட்டிச் சென்றேன்; ஆற அமர நாற்காலி தந்தேன்; தாகம் தீரத் தண்ணீர் தந்தேன்; வியர்வை நீங்க விசிறி போட்டேன்; உள்ளம் மகிழ்ந்து உறவுகளை விசாரித்தேன்; ஓய்வெடுக்க அறையைக் காட்டினேன்.
விருந்து உண்டோம்
சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர், வாழையிலையில் சாம்பார், ரசம், அப்பளம், பாயாசம், அவித்த முட்டை, மாங்காய் ஊறுகாய், முருங்கைக் கீரை, மோர் மணக்க மணக்க, மாமா முகம் அறிந்து விருந்து வைத்தேன்; கை அலம்பக் குவளைத் தண்ணீரும் கை துடைக்கத் துண்டும் கொணர்ந்தேன்.
உலா வந்தோம்
பின்னர், ஊர் நந்தவனத்திற்குச் சென்றோம்; காலார நடந்தோம்; களிப்புடன் பேசினோம்; பூ மரம் செடி கொடிகளைக் கண்டோம்; களித்தோம்; மாலை வேளை வந்தது. தோட்டத்துக் கிணற்றில் துள்ளிக் குதித்தோம்; நீரில் மூழ்கிமூழ்கி நீந்தினோம்; கிணற்று மீனைத் தொட்டுப் பிடித்து மகிழ்ந்தோம்; நாங்கள் பேசும் நகைச்சுவை கேட்டு மீன்கள் வந்து கிச்சுகிச்சு மூட்டின. இரண்டே எட்டில் செவ்விளநீர் மரத்தில் ஏறினேன். ஆளுக்கு இரண்டாய் அருந்தினோம்; கொய்யாப்பழம் கடித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.
கோவிலுக்குச் சென்றோம்
நான் எடுத்து வைத்திருந்த வெள்ளை சட்டையையும் வேட்டியையும் மாமாவுக்குப் பரிசளித்தேன். மாமா வாங்கித்தந்த புத்தாடை அணிந்து, ஊர்க்கோவிலை நோக்கி நடந்தோம். வாயில்தோறும் மஞ்சளும், தெருதோறும் தோரணமும் வாழையும் கமுகும் வாஞ்சையுடன் வரவேற்றன. கோயிலைச் சுற்றி வகைவகையாய் நிழல் மரங்கள்; மரங்கள்தோறும் வண்ண ஒளி விளக்குகள். அதைப் பிரதிபலிக்கும் பெரியகுளம்; ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டம்; அதை உடைக்கும் மங்கள வாத்தியம். வண்ண வண்ணப் பொங்கல்பானைகள். பெண்கள் குலவையுடன் பொங்கலிடும் காட்சி. வண்ண வண்ண வானவேடிக்கை. வகைவகையாய் ராட்டினங்கள்.
இரவு விருந்து
சாம்பாரில் மிதக்கும் இட்லியைச் சட்னியில் தொட்டு உண்டோம்; ஆடல் பாடல் கண்டு களித்தோம்; அது, விருந்தினும் விருந்தாய் அமைந்தது. கண்ணயர்ந்து தூங்கிப் போனோம்.
விடியல் வந்தது
பொழுது புலர்ந்தது; பறவைகள் பாடின; கதிரவன் கை நீட்டினான். அயர்ந்து தூங்கிய மாமாவை எழுப்பினேன். முகம் அலம்பக் குவளைத் தண்ணீரும் பல் துலக்க ஆல விழுதும் அன்புடன் அளித்தேன். தோட்டத்திற்குச் சென்றோம்; காலைக் கடனை முடித்தோம்; கிணற்றில் குளித்தோம்; மரத்தில் ஏறி மாவும் பலாவும் பறித்தோம்; வீடு திரும்பினோம்.
பிரிய மனமில்லை
தலைவாழை இலையில் பச்சைநெல் சோறும் நாட்டுக்கோழி குழம்பும் பொறித்த மீனும் அன்பு குழையக் குழையப் பரிமாறினேன். உண்டு மகிழ்ந்த மாமா, நன்றி கூறிப் புறப்பட்டார். ஊர் எல்லைவரை வந்து, மாம்பழ மூட்டையுடன் வழியனுப்பி வைத்தேன். இருவரும் பிரிய மனமின்றிப் பிரிந்தோம். நாங்கள் இருவரும் சுற்றிப் பார்த்து ரசித்த இடங்கள் கண்களுக்குள் நடனமாடின
4.சங்க இலக்கியத்தில் அறம்
முன்னுரை
தமிழர் பொருள் ஈட்டி அறம் செய்து இன்புற்றனர். இல்வாழ்க்கையை அற வாழ்க்கையாகக் கொண்டனர். உலகே பரிசாகக் கிடைத்தாலும் பழிதரும் செயல்களைச் செய்ய மறுத்தனர். சங்ககாலத்தில் அறத்தை மனித உறவின் மையமாகக் கொண்டிருந்தனர்.
அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை
“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்” என்னும் புறப்பாடல் வரிகள் அறம் செய்வதில் வணிக நோக்கம் கொள்ளாமையைக் குறிப்பிடுகிறது.
அரசியலில் அறம்
‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’, ‘அறநெறி பிழையாத் திறனறி மன்னர்’- என்னும் சங்க இலக்கிய வரிகள் அறநெறி அடிப்படையிலான ஆட்சி முறையைக் குறிப்பிடுகின்றன. நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப் பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகக் கருதப்பட்டது. அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்கப்பட்டது.
அறங்கூறவையம்
அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன. அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கதாக இருந்தது.
போர் அறம்:
வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார் முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்வதில்லை.
கொடை:
‘செல்வத்தின் பயனே ஈதல்’ என்கிறது புறநானூறு. வள்ளல்கள் ‘இல்லோர் ஒக்கல் தலைவன்’, ‘பசிப்பணி மருத்துவன்’ என்றெல்லாம் போற்றப்பட்டனர். ஈயாமையை இழிவு என்றனர்.
உதவி:
பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதி உதவுதல் பற்றி நல்லந்துவனார் குறிப்பிடுகிறார். உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான் என்கிறார் நல்வேட்டனார்.
வாய்மை:
வாய்மை பேசும் நாவே உண்மையான நா. ‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையை நற்றிணை குறிப்பிடுகின்றது. நிலம் புடைபெயர்ந்தாலும் பொய் சொல்லக்கூடாது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. பொய்ச்சான்று கூறாமையும் வலியுறுத்தப்பட்டது.
முடிவுரை
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் ஒரு மனிதன் தனியாகவும் சமூக உறுப்பினனாகவும் இயங்குவதற்கும் அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவும் விதிமுறைகள் எனலாம். சங்க இலக்கியங்கள் இயல்பான முதல் தரமான அறங்கள் ஆகும்.
5.தமிழ்மன்றப் பேச்சு
"இனிமைத் தமிழ்மொழி எமது எமக்கு இன்பம் தரும்படி வாய்த்தநல் அமுது". அமுத மொழி - தமிழ் மொழி. தமிழ்மன்றத்திற்கு வருகை தந்துள்ள சான்றோர் பெருமக்களே! பள்ளி எனும் தேரின் அச்சாணியாகிய தலைமை ஆசிரியர் அவர்களே! ஒளி விளக்கின் தூண்டுகோலாகிய ஆசிரியர் பெருமக்களே! நீர்த் தடாகத்தின் ஆம்பல் மொட்டுகளாகிய மாணவச் செல்வங்களே! உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.
தமிழின் சொல்வளம்
கால வெள்ளத்தில் கரைந்து போன மொழிகளுக்கு இடையில் நீந்தித் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது, தமிழ் மொழி. சொல்வளம் இலக்கிய செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவானது, என்றாலும் தமிழ் மட்டும் அதில் தலைசிறந்தது.
பயிர் வகைச் சொற்கள்
தமிழ்ச் சொல் வளத்தைப் பல துறைகளிலும் காணலாம். அதில் சிறப்பாக பயிர் வகைகளில் சொல் வளத்தைப் பற்றி இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். தாவரத்தின் அடிப்பகுதியை அதன் மென்மை வன்மை குறித்துத் தாள், தண்டு, கோல், தட்டை, தூறு, கழி, கழை, அடி எனப் பகுத்துள்ளனர். அடியில் இருந்து பிரிந்து செல்லும் மேல்நோக்கிய பிரிவுகளுக்கு கவை, கொப்பு, கிளை, சினை, போது, குச்சு, இணுக்கு எனப் பாகுபாடு செய்துள்ளனர்.
இலையின் வகைகளை அதன் மென்மை வன்மை பற்றி இலை, தாள், தோகை, ஓலை என்றும் காய்ந்த இலையைச் சருகு என்றும் காய்ந்த தோகையைச் சண்டு என்றும் பாகுபடுத்தி உள்ளனர். பூவின் மலரும் நிலைகளை அரும்பு, போது, மலர், வீ, செம்மல் எனப் பகுத்துள்ளனர்
பிஞ்சின் வகைகளைப் பூம்பிஞ்சு, பிஞ்சு, வடு, மூச்சு, கவ்வை, குரும்பை, முட்டுக் குரும்பை, இளநீர், நுழாய், கருக்கல், கச்சல் எனப் பெயரிட்டுள்ளனர். இதேபோல் குலை வகைகள், காய்கனி வகைகள், மணி வகைகள், இளம் பயிர் வகைகள், இளம்தளிர் வகைகள் என ஏராளமான தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. இதனால், தமிழ் சொல்வளம் உடையது என்பதும், தமிழ்நாடு பொருள் வளம் உடையது என்பதும் தெளிவாக விளங்குகிறது.
புதிய சொல்லாக்கத்திற்கான தேவை
இனி, தமிழில் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்துப் பார்ப்போம்.
ஒப்பீட்டளவில் இன்று மொழியின் வளர்ச்சிக்கு ஆதாரமாகச் சொல்லாக்கம் விளங்குகிறது. நாளும் மாறிவரும் அறிவியல், தொழில்நுட்பத்தின் விளைவாகத் தகவல் தொடர்பியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, இன்று தகவல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஒரு மொழியின் வளர்ச்சியென்பது இத்தகைய தகவல் தொழில்நுட்பப் புரட்சியை உள்வாங்கிக் கொண்டு, செறிவாக, வெளிப்படுவதாகும். குறிப்பாக இணையகங்களின் பக்கங்களில் அதிகபட்சமான இடத்தினைப் பிடித்துள்ள மொழிகளே, நன்கு வளர்ச்சியடைந்தவைகளாகக் கருதிட இயலும். இந்நிலையில், கருத்தியல் வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கும் சொற்கள் அதிக அளவில் உருவாக்கப்படுகின்ற மொழிகளே, உச்ச நிலையினை அடைய முடியும். தமிழைப் பொறுத்த வரையில், ''ஆட்சி மொழியாகவும் உயர்கல்வியில் பயிற்று மொழியாகவும் தமிழே இடம்பெற வேண்டும்'' என்பதால், புதிய சொல்லாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய முயற்சிகள், தமிழ்மொழியின் வளர்ச்சி வேகத்தினைத் தூண்டுகின்றன; சொற்களஞ்சியம் பெருகிடக் காரணமாக அமைகின்றன. எனவே, அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை இருக்கிறது என்று கூறி, எனது உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்.
6.மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்
இங்கே கூடியிருக்கும் ஆன்றோர்களே! தமிழ்ச் சான்றோர்களே! உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை உரித்தாக்குகிறேன். மாணவப் பருவம் என்பது பசுமையான நிகழ்வுகளைத் தாங்கி நிற்கும் நந்தவனம் ஆகும். அத்தகைய பருவத்தில் விதைக்கப்படும் கருத்துக்கள் 'பசுமரத்தாணி போல' பதியும். ஆதலால், இளமைப் பருவத்திலேயே ஒருமைப்பாட்டுணர்வும் நாட்டுப்பற்றும் ஊட்டப்பட வேண்டும்.
நாட்டு விழாக்கள்
உயர்ந்த இலட்சியங்களான சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் பேணவும், தேசிய ஒருமைப்பாட்டுணர்வை வளர்க்கவும், வேற்றுமையில் ஒற்றுமை காணவும் நாம் நாட்டு விழாக்களைக் கொண்டாடி வருகின்றோம். சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா, காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம் ஆகியவற்றைத் தேசிய விழாக்களாக நாம் கொண்டாடி வருகின்றோம். சுதந்திரத்திற்காகத் தமது இன்னுயிரை ஈந்த தலைவர்களை நினைவு கூறவும், தேசபக்தியை வளர்த்துக் கொள்ளவும், நாட்டின் முன்னேற்றத்திற்குத் தம்மை அர்ப்பணிக்கவும் நாட்டு விழாக்கள் துணைபுரிகின்றன.
விடுதலைப் போராட்ட வரலாறு
நமது இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு மிக நீண்டது. வணிகம் செய்யும் பொருட்டு இந்தியாவிற்குள் நுழைந்த ஆங்கிலேயர் அங்காங்கே வணிகத் தளங்களை நிறுவினர். அவற்றை நிர்வாகம் செய்யும் பொருட்டு, தங்களுக்கென்று நிர்வாக அமைப்பையும் இராணுவத்தையும் அமைத்துக்கொண்டனர். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதைப்போல, உள்நாட்டில் எழுந்த உட்பூசல்களில் தலையிட்டு, வரிவசூல் செய்யும் அதிகாரத்தையும், பின்னர் படிப்படியாக ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் பெற்றனர்.
நீதிமுறையற்ற வரிவசூல் முறைகளால் பாதிக்கப்பட்ட பாளையக்காரர்கள் கிளர்ச்சி செய்தனர். வெல்லெஸ்லியின் துணைப்படைத்திட்டத்தாலும் டல்கௌசியின் வாரிசு இழப்புக் கொள்கையாலும் ஆட்சியை இழந்த மன்னர்களும், இராணுவச் சீர்திருத்தங்களால் பாதிக்கப்பட்ட இந்திய வீரர்களும் முதல் இந்திய சுதந்திரப் போரில் கலந்து கொண்டனர். ஆங்கிலக் கல்வியின் தாக்கத்தால் படித்த இந்தியர்கள் படிப்படியாக அரசியல் சமத்துவம் வேண்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். சமூக மற்றும் சமயச் சீர்திருத்த இயக்கங்கள் இந்தியாவின் பெருமையை வெளிக்கொண்டு வந்தன.
1885இல் உருவான இந்தியத்தேசியக் காங்கிரஸ் எனும் பேரியக்கம் ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்களை அமைதி வழியில்நின்று நடத்தி வெற்றி கண்டது. கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியாவிற்குத் தன்னாட்சி வழங்கப் பரிந்துரை செய்தது. கேபினட் தூதுக்குழு இந்தியாவிற்குத் தனி அரசியலமைப்புக்குழு அமைக்க பரிந்துரை செய்தது. இறுதியாக, மவுண்ட்பேட்டன் திட்டப்படி சுதந்திர இந்தியா உருவானது.
நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு
இன்றைய மாணவர்கள் எதிர்கால இந்தியாவின் தூண்கள். அவர்கள் நாட்டுப்பற்று மிக்கவர்களாகவும் சமூகத்தொண்டு புரிபவர்களாகவும் மலர வேண்டும். 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பதை உணர்ந்து இளமைப் பருவத்திலேயே சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, பசுமைப்படை, செஞ்சிலுவைச் சங்கம், சுற்றுச்சூழல் மன்றம், சாலைப் பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றில் சேர்ந்து பல்வகைத் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும். அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டும். மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். நீர்நிலைகளைப் பராமரிக்க வேண்டும். சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்குபெற வேண்டும்.
எழுத்தறிவற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல், பேரிடர், திருவிழாக்கள் ஆகியவற்றில் காவல்துறைக்கு உதவியாக இருக்க வேண்டும். நலிவடைந்தோர் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
தேசியச் சின்னங்களை மதிக்க வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டைப் பேணிக் காக்க வேண்டும். மூத்தோருக்குக் கீழ்ப்படிய வேண்டும். சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், பொறுமை, சகோதரத்துவ உணர்வு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
முடிவுரை
“பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே" என்கிறார் பாரதியார். பெற்ற தாயைப்போல பிறந்த பொன்னாட்டைப் பேணிக்காப்பது நமது ஒவ்வொருவரின் கடமை என்று கூறி, பேச வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
7. மாணவன் எப்படி இருக்க வேண்டும்?
கதைக்களம்: தத்துவமேதை சாக்ரடீஸ் அவர்களின் வீடு
கதைமாந்தர்கள்: சாக்ரடீஸ், அவரது மாணவர்
(சாக்ரடீஸிடம், அவருடைய மாணவன் ஒருவன் வந்தான்).
மாணவன்: ஐயா, மாணவன் எப்படி இருக்க வேண்டும்?
சாக்ரடீஸ்: மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்.
மாணவன்: ஒன்றும் புரியவில்லை ஐயா. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் ஐயா.
சாக்ரடீஸ்: கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்.
மாணவன்: கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?
சாக்ரடீஸ்: கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும்.
அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி விட்டு, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாணவன்: அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே…
சாக்ரடீஸ்: ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும்.
அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்.
மாணவன்: எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே… அதற்கு என்ன அர்த்தம்?
சாக்ரடீஸ்: மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்.(புன்னகை பூக்கிறார்)
(அந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினான்.)
கிரேக்க தத்துவமேதையான சாக்ரடீஸ் கூறிய 'மாணவன் எப்படி இருக்க வேண்டும்?' என்பதை அறிந்து கொண்டீர்களா? அவருடைய அறிவுரைகளைப் பின்பற்றி நடந்து கொள்ளுங்கள்.