2 மதிப்பெண்
உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவை எனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
- எதுவுமே இல்லாத பெருவெளியில் பேரொலியுடன் காற்று முதலான அணுக்களுடன் வளர்கின்ற வானம் தோன்றியது.
- அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து நெருப்புப் பந்தாய்ப் பூமி உருவானது.
- பிறகு பூமி குளிர மழை பெய்தது. தொடர் மழையால், மீண்டும் மீண்டும் உருவான தொடர் வெள்ளத்தால், உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் உருவானது.
8 மதிப்பெண்
நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.
தலைப்பு: தமிழ் இலக்கியத்தில் அறிவியல்
பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும் தமிழ் மொழியில், அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும் புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள், இலக்கியங்களில் உள்ளன. சங்க இலக்கியமான பரிபாடலில்...
கீரந்தையார் என்னும் சங்கப்புலவர்,
(1). ஒன்றுமில்லாத ஊழிக்காலம் வந்தது. அந்த ஊழிக்காலம் செல்ல,
(2). பரம அணுவிலிருந்து ஆகாயம் தோன்றியது.
(3). பரம அணுவைச் சுற்றிச் சுழல்கின்ற காற்றின் ஊழிக்காலம் வந்தது.
(4). காற்றினால் செந்நிறத்தில் ஒளிரும் நெருப்பு ஊழிக்காலம் வந்தது.
(5). காற்று மற்றும் நெருப்பின் விளைவால் பனியும் மழையும் பெய்த ஊழிக்காலம் வந்தது.
(6). வெள்ளத்தால் மூடி இருந்த நிலம் எரிமலை வெடிப்புகளால் மீண்டும் மேலெழுந்து நிலமும் கடலும் தோன்றியது என்று கூறியுள்ளார்.
உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று புறநானூறு கூறுகிறது.
"சுழன்றும் ஏர்பின்னது உலகம்" என்னும் குறள் உலகம் உருண்டை என்பதையும், 'திங்களைப் பாம்பு கொண்டற்று' என்னும் குறள் சந்திரகிரகணம் பற்றியும் குறிப்பிடுகிறது.
'புல்லாகிப் பூடாகி' எனத்தொடங்கும் திருவாசக வரிகள் பரிணாம வளர்ச்சி குறித்துக் கூறுகிறது.
'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி' என்னும் அவ்வையாரின் வரிகள் அறிவியல் அறிவைப் பறைசாற்றுகின்றன.
இவையெல்லாம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் அறிவியல் செய்திகள் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.