சிறப்புடைய இடுகை

கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை

 விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

முன்னுரை 

"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி 
பேணி வளர்த்திடும் ஈசன் "

என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, ஞானப் பெண்ணாய் ஞாலம் அளந்தாள், வீரமங்கை. நிலவைப் பார்த்து உணவுண்ட காலத்திலேயே, நிலவில் சோறு உண்ணக் கனாக் கண்டவள், கல்பனா. வானில் நட்சத்திரங்களை எண்ணி, அவள் வானத்து நட்சத்திரமான வரலாறு காண்போம், வாரீர்!

குழந்தைப் பருவம்

அரியானா மாநிலம் கர்னல் என்னும் ஊரில் பனாரஸ் லால் சாவ்லா - சன்யோகிதா தேவி இணையருக்கு மகளாக மார்ச் 17, 1962 ஆம் ஆண்டு பிறந்தார், கல்பனா. கல்பனா என்ற பெயருக்கு 'கற்பனை' என்று பொருள். கல்பனாவுக்கு, விமான ஓட்டியும் தொழில் அதிபருமான ஜே. ஆர். டி. டாடா (ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா) அவர்களைப் பார்த்தது முதல் விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.

கல்வி

கல்பனா பள்ளிக்கல்வியைத் தாகூர் அரசுப் பள்ளியிலும், இளங்கலை விண்வெளிப் பொறியியல் படிப்பைப் பஞ்சாப் பொறியியல் கல்லூரியிலும், முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலையிலும், முனைவர்பட்ட விண்வெளிப் பொறியியல் படிப்பைக் கொலராடோ பல்கலையிலும் படித்தார்.

பணி

நாசாவின் அமெஸ் ஆராய்ச்சி மையத்தோடு இணைக்கப்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட முறைகள் பிரிவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். செங்குத்தாக குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரை இறங்குதல் பற்றிக் திரவ இயக்கவியல் கணக்கீடு ஆராய்ச்சி மேற்கொண்டார். விமானம் மற்றும் மிதவை வானூர்திகளை (கிளைடர்களை) ஓட்டக் கற்றுக் கொடுக்கும் தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு, ஓட்ட அனுமதியும் பெற்றார்

1995ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார்.  

சாதனைகள்

1997ஆம் ஆண்டு விண்வெளி விண்கலப் பணி ஊர்தி 87 இல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கினார்.  பின்னர், தொழில் நுட்ப வல்லுநராக விண்வெளி அலுவலகத்தில் நியமிக்கப்பட்டார்.

ஜனவரி 16, 2003 விண்வெளி விண்கலப்பணி ஊர்தி 107 இல் விண்வெளிக்குச் சென்றார்.  கல்பனா சாவ்லாவின் பொறுப்புகளாக 'மைக்ரோ ஈர்ப்பு' (கிராவிட்டி) சோதனைகள் அமைந்திருந்தன. கல்பனாவின் குழு எண்பது பரிசோதனைகளை மேற்கொண்டது.

விபத்து 

பிப்ரவரி 1, 2003 இல் தனது பதினாறு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பூமியை வந்தடைய 15 நிமிடங்களே இருந்த நிலையில் விண்கலம் விபத்துக்குள்ளானது. இரண்டு பெண்கள் உட்பட ஏழு விண்வெளி வீரர்களும் பலியானார்கள்.  இந்தியா, அமெரிக்கா உட்பட உலகமே அதிர்ச்சியோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.

விருதுகள்

அமெரிக்க காங்கிரஸ் விண்வெளிப் பதக்கமும், நாசாவின் விண்ணோட்டப் பதக்கம் மற்றும் சிறப்பு சமூக சேவைக்கான பதக்கமும் கல்பனாவுக்கு வழங்கப்பட்டது.  இளம்பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாக கர்நாடக அரசு 2004 முதல் 'கல்பனா சாவ்லா விருது' வழங்கி வருகிறது.  இஸ்ரோ 'கல்பனா சாவ்லா' பெயரில் ஒரு விண்கலத்தை ஏவியது. அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனம் தனது விண்கலத்திற்கு 'எஸ்எஸ் கல்பனா' என்று பெயரிட்டுள்ளது.  

முடிவுரை

விண்வெளி வீரராக கல்பனா சாவ்லாவின் பங்களிப்பு தற்போது வரை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  அவரது தியாகம் வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. "வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்; சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்" என்ற பாரதியின் வரிகளை மனதில் கொண்டு, கனவுகளை நனவாக்கிச், சாதனை படைத்த சாவ்லாவின் வழியைப் பின்பற்றுவோம், வாரீர்!

கட்டுரை அரசுப் பொருட்காட்சி

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை கட்டுரையாக்குக.

அரசுப்பொருட்காட்சி

முன்னுரை

     கண்ணால் காண்பவை மனத்தில் ஆழமாகப் பதிந்து, நெடுங்காலம் நிலைத்திருக்கும். அந்த வகையில் பொருட்காட்சிகள் கூட மக்கள் அறிவை வளர்க்கப் பெருந்துணை புரிகின்றன. நான் அண்மையில் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்தேன். அது குறித்துச் சில செய்திகளைக் கூறுகிறேன், கேளுங்கள்.

தமுக்கம் மைதானம்

     தமுக்கம் மைதானம் மதுரையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மைதானமாக பதினான்காம் நூற்றாண்டில் மன்னர் விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டு, மதுரை நாயக்கர் வம்சத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. 

பல்துறை அரங்குகள்

     அரசு ஏற்பாடு செய்திருந்த பொருட்காட்சி ஆதலால், உள்ளே நுழைந்ததும் அரசு சார்புடைய காவல்துறை, சுற்றுலாத் துறை, பொதுப்பணித் துறை, அற நிலையத் துறை, வனத் துறை, தீயணைப்புத் துறை, விளம்பரத் துறை, போக்குவரத்துத் துறை, மின்துறை, அறிவியல் துறை எனப் பல்வேறு துறைசார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. விவசாயம், கைத்தறி, மீன் வளர்ப்பு முதலான துறை சார்ந்த அரங்குகளும் இருந்தன. அவற்றில் நமக்குத் தேவையான விளக்கமளிக்கப் பொறுப்புடைய பலர் காத்திருந்தது சிறப்பாக இருந்தது. நான் பல வினாக்களை வினவி, என் ஐயங்களைப் போக்கிக் கொண்டேன்.

பல்வேறு கடைகள்

     சிறுவர்களுக்கான பொம்மைகள் விற்கும் கடைகள், புத்தகக் கடைகள், ஆயத்த ஆடைகள் விற்கும் கடைகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள், கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகள் எனப் பல்வேறு கடைகள் அங்கே காணப்பட்டன.

கேளிக்கை அரங்குகள்

       பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட்டன. மீன் கண்காட்சிக் கூடம் கண்களைக் கவர்வதாக இருந்தது. பல்வேறு வகையான இராட்டினங்களில் குழந்தைகள், சிறியவர், பெரியவர் என அனைவரும் சுற்றி மகிழ்ந்தனர்.

உணவு அரங்குகள்

     குடும்பம் குடும்பமாக வந்திருந்த சிலர், அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு உணவு அரங்கங்களில் கூடிநின்று, பல்வேறு வகையான தின்பண்டங்களை வாங்கி உண்டு மகிழ்ந்தனர். அங்குக் குடிப்பதற்குப் பல்வேறு வகையான சாறுகள் வழங்கப்பட்டன. பனிக்கூழ் வகைகள் எல்லோரையும் கவர்ந்தன. 'ஆவின்' பால் நிறுவனம் அமைத்திருந்த அரங்கில் எண்ணற்ற மக்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சுவையுடைய பண்டங்களை வாங்கிச் சுவைத்தனர்.

முடிவுரை

     பொருட்காட்சி என்பது வெறும் பொருள்களை மட்டும் காண உதவவில்லை. அது பல்வேறு துறை அறிவையும் பெற உதவுவதாக அமைந்துள்ளது. எனவே, அடுத்த முறை நண்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவுடன் வீடு திரும்பினேன்.

பாய்ச்சல்-பொம்மலாட்டக் கலை -பாராட்டுரை

நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக.

பாராட்டுரை

முன்னுரை

பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்துவது என்பது கத்திமேல் நடப்பது போன்றது. விரல் நுனியில் காட்சிகளை மாற்றி கண்முன்னே நிறுத்துவது இதன் சிறப்பம்சம்.  உயிருள்ள மனிதர்கள் பேசுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளுணர்வில் மாற்றத்தை ஏற்படுத்த வல்லது. 

பாராட்டுரை

நமது பள்ளி ஆண்டு விழா என்பது ஒவ்வொரு மாணவருக்கும் மிகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு நிகழ்வாகும். என்றும் பசுமையான நினைவுகளாக இருக்கக்கூடிய ஆண்டுவிழாவில், ஆண்டுதோறும் புதியபுதிய சிந்தனைகளை மாணவர்கள் மனத்தில் விதைப்பீர்கள். அந்த வகையில் இந்த ஆண்டு நெகிழிப்பைகளின் தீமையைக் கருவாகக் கொண்டமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதை விதைப்பதற்கு நமது பாரம்பரியக் கலையான பொம்மலாட்டக் கலையைத் தேர்வு செய்த பள்ளி ஆண்டுவிழா ஏற்பாட்டாளர்களுக்குத் தலை வணங்குகிறேன்.

நாங்கள் அடைந்த விழிப்புணர்வு

  1. பாலித்தீன் பைகள் கால்வாய்களில் அடைத்துக் கொள்வதால் நீர்வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன. 
  2. நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. 
  3. நெகிழிப்பைகள் பல்லுயிர் பெருக்கச் சூழலைப் பெரிதும்பாதிக்கின்றன.

நிகழ்ச்சியின் தாக்கம்

  1.  'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என்பது போல இந்த நிகழ்ச்சியின் மூலம் பொம்மலாட்டக் கலையின் அருமை பெருமைகளை அறிந்து கொண்டதோடு நெகிழிப் பைகளின் தீமைகளையும் அறிந்துகொண்டோம். 
  2. நெகிழிப் பைகளைத் தவிர்த்து, துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற மனமாற்றம் ஏற்பட இந்த நிகழ்ச்சியே காரணமாக அமைந்தது.

முடிவுரை

அழிவில் இருக்கும் பொம்மலாட்டக் கலையைக் காக்க மத்திய மாநில அரசுகள் பள்ளிப்பாடத் திட்டத்தில் செயல்முறைப்பயிற்சியாக பொம்மலாட்டத்தை வைக்க வேண்டும் என்று கூறி எனது பாராட்டுரையை நிறைவு செய்கிறேன்.

கட்டுரை மதிப்புரை

 பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/ கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.

மதிப்புரை

நூலின் தலைப்பு: மணிமேகலை

நூலின் மையப் பொருள் : மணிமேகலை மேற்கொண்ட துறவு

மொழிநடை : நாவல்

வெளிப்படுத்தும் கருத்து : 

     நாம் போன பிறவியில் செய்த பாவத்தின் பயனாகத்தான் இந்த உடம்பு வாய்த்திருக்கிறது. இந்த உடம்பை வைத்துக்கொண்டு நல்லது செய்வதும் கெட்டது செய்வதும் முழுக்க முழுக்க நம்முடைய கையில் தான் இருக்கிறது. இந்த உடம்பு அழகானது என்று நினைத்தால் அந்த கருத்தைத் தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள். இந்த அழகு நிலை இல்லாதது. இளமை போய் முதுமை வந்து விட்டால் அத்தனை அழகும் மறைந்து போகும். இந்த நிலை இல்லாத உடம்பைப் பராமரிக்கத் தான் எத்தனை அலங்காரங்கள்? அழகு சாதனங்கள், நறுமணப் பூச்சுகள். இதை எல்லாம் நீக்கி விட்டால் இந்த உடம்பு எத்தனை கேவலமான நாற்றம் கொண்டது என்று புரியும். புற்றுக்குள் பாம்பு புகுந்தது போல கோபம், வருத்தம், கவலை, துன்பம் எல்லாம் உள்ளே பூட்டி வைக்கிறோம்.

நூலின் நயம் : 

தீவதிலகையின் கூற்று:

     இந்த உலகத்தையே பெரும் துன்பத்தில் ஆழ்த்தக் கூடிய ஒரு மிகப்பெரிய நோய் பசி. அந்தப் பசியைப் போக்கும் அற்புத மருந்து அந்த அமுதசுரபி. நீ அதை ஏற்றுக்கொண்டு, இல்லாதவர்களுக்கு உணவு கொடுத்து மகிழச் செய்ய வேண்டும். உன் மூலம் இந்த பூமி மொத்தமும் நலம் பெறவேண்டும்.

அறவண அடிகளின் கூற்று:

     இங்கிருந்து சூரிய மண்டலம் தொலைவில் உள்ளது என்பதை நாம் உணர முடியும். ஆனால், அதைக் கண்ணால் பார்த்து அறிவது சாத்தியமில்லை. அதுபோலத்தான், நல்ல அறநெறிகளை நாம் நேரில் பார்த்தால் தான் நம்புவோம் என்று பிடிவாதம் பிடிக்கக் கூடாது. மற்றவர்கள் உணர்த்துவதை உள்ளத்தால் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆதிரையின் கணவன் சாதுவன் கூற்று:

     கள் நம்முடைய அறிவை மயக்குகிறது. மாமிசம், மற்ற உயிர்களைக் கொன்று பிழைக்கச் சொல்கிறது. பல பெண்களின் பின்னே அலைவதும் மிருகக் குணம் தான்.

நூலின் கட்டமைப்பு : 

     மணிமேகலைக் காப்பியத்தை, இவள் பெயர் மணிமேகலைமுதல் குற்றம்தவிர்த்த வாழ்க்கை ஈறாக 66 தலைப்புகளில் நாவல் வடிவில் விளக்குகிறது.

சிறப்புக் கூறு : 

     மூல நூலான மணிமேகலையை விட, நாவல் வடிவிலமைந்த இந்த நூல் எளிய நடையில் கதை சொல்கிறது. ஒரே மூச்சில் படித்து முடித்துவிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

     நாடகக் காட்சிகளை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி, மணிமேகலை வாழ்ந்த உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. 

     புத்தர் அறிவித்த நன்னெறிகள், நூல் முழுவதும் தொடர்கின்றன. இக்கால சமுதாயம் சீர்பெற மிகவும் அவசியமான நூலாகும்.

     மிகுந்த சுவையோடு எழுதப்பட்டிருக்கும் இந்நூல் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.

நூலின் ஆசிரியர்: என். சொக்கன்



சான்றோர் வளர்த்த தமிழ் கட்டுரை

குமரிக்கடல் முனையையும் வேங்கட மலை முகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி ,கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை மாத்து, அணியாகப் பூட்டி, அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப்புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக் கொண்டு 'சான்றோர் வளர்த்த தமிழ்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

சான்றோர் வளர்த்த தமிழ்

முன்னுரை

பூஞ்சோலையில் பல வண்ண மலர்கள் மலர, அவற்றின்  நறுமணமும் தேனும் தென்றலில் கரைய, அவற்றின் ஈர்ப்பினால் தேன்பருகிய வண்டுகள் ஆர்ப்பரிப்பதுபோல் தமிழ்த்தேனைப் பருகி, தமிழின் பெருமையைப் பாடி, தமிழ் வளர்த்த சான்றோர்களை அறிவோம், வாரீர்.

தமிழின் எல்லை

"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து" என்று தொல்காப்பியம் தமிழின் எல்லையை வரையறுக்கிறது.

எழில்சேர் கன்னி 

தமிழன்னை ஐம்பெரும் காப்பியங்களை அணிகலன்களாகப் பூண்டவள்; பாலும் தேனும் போன்றிருக்கும் பாட்டும் தொகையும் கொண்டவள்; நீதி நூல்களையும் சிற்றிலக்கியங்களையும் அணிந்து எழில்சேர் கன்னியாய்க் காட்சி தருகிறாள்.

பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்தவள் 

இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் காலத்தால் முந்தியது.  மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழும் சேக்கிழார் பிள்ளைத்தமிழும்  சிறப்பு மிக்கவை.

மாணிக்கவாசகரின் திருச்சதகமே முதல் சதகம் ஆகும்.  தொண்டைமண்டல சதகம் புகழ் வாய்ந்தது

பரணி பாடி, கலம்பகம் கண்டவள்

கலிங்கத்துப்பரணியே முதல் பரணியாகும்.  மோகவதைப் பரணி,  பாசவதைப் பரணி,  தக்கயாகப் பரணி ஆகியவை சிறப்பு வாய்ந்தவை.

நந்திக்கலம்பகமே முதல் கலம்பக நூலாகும். இரட்டையர்கள், கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள். 

உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்தவள் 

'திருக்கயிலாய ஞான உலா' காலத்தால் முற்பட்டது. ஒட்டக்கூத்தரின் 'மூவருலா' குறிப்பிடத்தக்கது.

அற்புதத் திருவந்தாதியே முதல் அந்தாதி. முதலாழ்வார் மூவரின் நூற்றந்தாதிகள், பொன்வண்ணத்தந்தாதி போன்றவை குறிப்பிடத் தகுந்தவை. சிற்றிலக்கிய வகைகளில் அந்தாதி வகையே மிகுதி.

பாண்டிக்கோவை, திருக்கோவை,  தஞ்சைவாணன் கோவை ஆகியவை புகழ்பெற்றவை.

முடிவுரை

கம்பரும் கபிலரும், ஔவையும் வள்ளுவரும், ஆழ்வார்களும் நாயன்மார்களும், வீரமாமுனிவரும் உ.வே.சாமிநாதரும், பாரதியும் தாசனும் இன்னும் பலரும் அருந்தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றியுள்ளனர்.  'தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை' என்ற பாரதிதாசனின் கூற்று மெய்யே.