2 மதிப்பெண்
வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.
எ.கா: செயற்கை நுண்ணறிவு இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.
விடை:
அ). செயற்கை நுண்ணறிவால் இயங்கும் வகுப்பறை ரோபோ ஆசிரியர்.
ஆ). நுட்பமான அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவ ரோபோ.
3 மதிப்பெண்
1. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.
- அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தே செய்ய முடிகிறது.
- விண்ணிற்குச் செயற்கைக்கோள்களை ஏவி, பூமியின் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து, திட்டமிட்டுச் செயல்பட முடிகிறது.
- செயற்கை நுண்ணறிவுடன் கூடிய இயந்திர மனிதன் ஆசிரியராக, வங்கி உதவியாளராக, போக்குவரத்துக் காவலராக, கால்நடைப் பராமரிப்பாளராக, நுட்பமான அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவராகப் பணியாற்றி மனித வாழ்வை வளப்படுத்துகிறது.
- மின் வணிகம், காணொலி வழி மருத்துவ ஆலோசனை, அரசுத்துறைகளின் மின்னணு முறையிலான சேவைகள் முதலியவை மக்களுக்குப் பெரிதும் பயன்தருகின்றன.(ஏதேனும் மூன்று கருத்துகள் மட்டும்)
2). மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியில் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனித குலத்துக்கு ஏற்படுகின்ற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு எதிர்காலத் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் எழுதுக.
எதிர்காலத் தொழில்நுட்பம்
- செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் மனிதர்களால் செய்ய இயலாத, அலுப்புத் தட்ட கூடிய, ஆபத்தான கடினமான செயல்களைச் செய்யும்.
- குழந்தைகளைப் பாதுகாப்பது, பராமரிப்பது முதல் வயதானவர்களுக்கு உற்ற தோழனாய் இருப்பது வரை அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களே செய்யும்.
- நம்முடன் உரையாடுவது, ஆலோசனை வழங்குவது, பயண ஏற்பாடு செய்து தருவது, தண்ணீர் கொண்டு வந்து தருவது, உடன் வந்திருக்கும் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவது எனப் பலவற்றை செய்யும்.
8 மதிப்பெண்
ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேநீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா?இக்கருத்துக்களை ஒட்டிச் 'செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்' பற்றி ஒரு கட்டுரை எழுதுக.
செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்
முன்னுரை
ஒரு மனிதனைப் போன்றே உணர்வுப் பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும், தர்க்கரீதியிலும், தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் ஆற்றலை ஒரு இயந்திரம் பெறுவது பல கேள்விகளை எழுப்புகின்றது. செயற்கை நுண்ணறிவு வணிகத்தோடு நின்று விடுமா? அல்லது சமூக நலனில் அக்கறை கொள்ளுமா? என்பதைப் பற்றி விவாதிப்போம், வாருங்கள்.
பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய இயந்திர மனிதன் ஆசிரியராக, வங்கி உதவியாளராக, போக்குவரத்துக் காவலராக, கால்நடைப் பராமரிப்பாளராக, நுட்பமான அறுவைச் சிகிச்சை மருத்துவராகப் பணியாற்றி மனித வாழ்வை வளப்படுத்துகிறது.
எதிர்கால வெளிப்பாடுகள்
உள்ளீடு செய்யப்பட்ட மற்றும் திரட்டப்பட்ட மின்தரவுகளை ஆழ்நிலைக் கற்றலுக்கு உட்படுத்துவது, இயந்திரக் கற்றல் முறையின் மூலம் ஆராய்வது போன்ற தொழில்நுட்ப உத்திகளின் மூலம் செயற்கை நுண்ணறிவு சுயேச்சையான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு உயர்ந்து வருகிறது.
உயிரியல் துறையிலும் கணினித் துறையிலும் நடக்கும் ஆராய்ச்சிகள் ஒன்றை ஒன்று செழுமைப்படுத்தி முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் எட்டப்படும் மைல்கற்கள் ஒவ்வொன்றும் மனிதமூளை குறித்த புதிய புரிதல்களை ஏற்படுத்துவதோடு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அடைய வேண்டிய புதிய இலக்கையும் நிர்ணயிக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் இந்த வளர்ச்சிப் போக்குகள் அனைத்தும் மிக விரைவில் உணர்வு கொண்ட மனித இயந்திரங்களின் பயன்பாடு சாத்தியமே என்பதற்கு கட்டியம் கூறுகின்றன.
செயற்கை நுண்ணறிதிறன் தன் வளர்ச்சியின் ஊடாக உணர்வு சார்ந்த முடிவெடுக்கும் ஆற்றலை மெல்ல மெல்ல அடைந்து வருகின்றது. அத்தகைய உணர்வு சார்ந்த முடிவெடுக்கும் ஆற்றலால், ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த தேனீர் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளும் என்று நம்பலாம்.
முடிவுரை
செயற்கை நுண்ணறிவு நமது வாழ்க்கையையும் வணிகத்தையும் நம்மை அறியாமலேயே வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. அத்தகைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள நாம் அணியமாக இருக்க வேண்டும்.