நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக.
பாராட்டுரை
முன்னுரை
பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்துவது என்பது கத்திமேல் நடப்பது போன்றது. விரல் நுனியில் காட்சிகளை மாற்றி கண்முன்னே நிறுத்துவது இதன் சிறப்பம்சம். உயிருள்ள மனிதர்கள் பேசுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளுணர்வில் மாற்றத்தை ஏற்படுத்த வல்லது.
பாராட்டுரை
நமது பள்ளி ஆண்டு விழா என்பது ஒவ்வொரு மாணவருக்கும் மிகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு நிகழ்வாகும். என்றும் பசுமையான நினைவுகளாக இருக்கக்கூடிய ஆண்டுவிழாவில், ஆண்டுதோறும் புதியபுதிய சிந்தனைகளை மாணவர்கள் மனத்தில் விதைப்பீர்கள். அந்த வகையில் இந்த ஆண்டு நெகிழிப்பைகளின் தீமையைக் கருவாகக் கொண்டமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதை விதைப்பதற்கு நமது பாரம்பரியக் கலையான பொம்மலாட்டக் கலையைத் தேர்வு செய்த பள்ளி ஆண்டுவிழா ஏற்பாட்டாளர்களுக்குத் தலை வணங்குகிறேன்.
நாங்கள் அடைந்த விழிப்புணர்வு
- பாலித்தீன் பைகள் கால்வாய்களில் அடைத்துக் கொள்வதால் நீர்வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன.
- நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன.
- நெகிழிப்பைகள் பல்லுயிர் பெருக்கச் சூழலைப் பெரிதும்பாதிக்கின்றன.
நிகழ்ச்சியின் தாக்கம்
- 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என்பது போல இந்த நிகழ்ச்சியின் மூலம் பொம்மலாட்டக் கலையின் அருமை பெருமைகளை அறிந்து கொண்டதோடு நெகிழிப் பைகளின் தீமைகளையும் அறிந்துகொண்டோம்.
- நெகிழிப் பைகளைத் தவிர்த்து, துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற மனமாற்றம் ஏற்பட இந்த நிகழ்ச்சியே காரணமாக அமைந்தது.
முடிவுரை
அழிவில் இருக்கும் பொம்மலாட்டக் கலையைக் காக்க மத்திய மாநில அரசுகள் பள்ளிப்பாடத் திட்டத்தில் செயல்முறைப்பயிற்சியாக பொம்மலாட்டத்தை வைக்க வேண்டும் என்று கூறி எனது பாராட்டுரையை நிறைவு செய்கிறேன்.