சிறப்புடைய இடுகை

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க. வினா எண் 29 அல்லது 30 அல்லது 31ல் ஏதேனும் ஒரு வினாவாக வரும். மூன்று மதிப்பெண்களை உடையது. உரைப்பத்தி (Paragraph) கொடுக்கப்பட்டு மூன்று வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். அவற்றிற்கான விடைகள் பெரும்பாலும் அப்பத்திக்குள்ளேயே இருக்கும்.

1.வினாக்களில் உள்ள வார்த்தைகளையும் உரைப்பத்தியில் உள்ள வார்த்தைகளையும் ஒப்பீடு செய்து அவ்வார்த்தை எந்தத் தொடரில் வருகிறதோ அந்தத் தொடர் முழுவதையும் எழுதுங்கள் அல்லது பத்தி முழுவதையும் எழுதுங்கள். மூன்று வினாக்களுக்கும் அவ்வாறே செய்யுங்கள். வினாஎண் மறக்காமல் எழுதுங்கள்

2.சில நேரங்களில் உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு என்ன என்று கேட்கிறார்கள். அப்பத்தியைப் படித்துப் பாருங்கள். எந்தச் சொல் திரும்பத் திரும்ப வருகிறதோ அந்தச் சொல்தான் அப்பத்திக்குரிய தலைப்பு. அதை எழுதுங்கள்.

3.சில வேளைகளில் சிந்தித்துப் பதில் அளிக்கக்கூடிய வினாக்கள் கேட்கப்படுகின்றன. உங்கள் சிந்தனையில் என்ன தோன்றுகிறதோ அதுதான் விடை. அதை எழுதுங்கள்.

செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்

பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள்: மாலைமலர்; பலா மலர்.

மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இது தான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.

அகவிதழ் முதலிய உறுப்புகளில் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா.

பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப்பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூக்கள் குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.

1.மலர் உண்டு; பெயரும் உண்டு- இரண்டு தொடர்களையும் ஒரு தொடராகக்குக.

மலரும், மலருக்குப் பெயரும் உண்டு

2.அரும்பாகி மொட்டாகிப் பூவாகி…. என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரை கண்டறிக.

காய் தோன்றிக் கனியாகி….

3.நீங்கள் அறிந்த இழப்புக்களின் பெயர்களையும் பயன்களையும் எழுதுக.

பாதிரிப்பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்

கள்ளிப்பூ இறைவழிபாட்டிற்கு உரியது

4.அரிய மலர்- இலக்கணக் குறிப்புத் தருக.

குறிப்புப் பெயரெச்சம்

5. தொடரில் பொருந்தாப் பொருள்தரும் மயங்கொலி எழுத்துக்களைத் திருத்துக.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும். பாதிரிப்பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும்.

விடை:

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப்பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்.


பத்தியைப் படித்துப் பதில் தருக.

பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக் காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகியஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக் காலம் கடந்தது

1. பத்தியில் உள்ள அடுக்கு தொடர்களை எடுத்து எழுதுக.

மீண்டும் மீண்டும்

2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.

3.பெய்த மழை- இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

பெய்மழை

4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?

பெருவெடிப்புக் கொள்கை

5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவீர் கருதுவன யாவை?

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை அடங்கிய சூழலே உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாகும்.