சிறப்புடைய இடுகை

மனிதநேயம் மலரட்டும்

 மனிதநேயம் மலரட்டும் 

உலகில் தோன்றிய இனங்களிலேயே மூத்த இனம் தமிழினம்; மூத்த மொழி தமிழ் மொழி என்ற உரிமையோடு, பண்பற்றவர்களைப் பண்படுத்தக்கூடிய, என் உணர்விலும் உயிரிலும் கலந்திருக்கும் தமிழ்த்தாயை வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்றான் என் அய்யன் வள்ளுவன். வள்ளுவனின் வாய்மொழியில் பிழையான பொருள் எதுவும் உண்டோ?

அன்பே அகில உலகையும் வழி நடத்துகிறது; அன்பின் அடித்தளத்திலேயே அகன்ற உலகம் இயங்குகிறது; அன்புடையார் பிறர் நலத்திற்காக தம்மையே கொடுத்து மகிழ்வார். அன்பே மனிதநேயத்திற்கு அடிப்படை. மனிதப் பண்புகளில் உயர்ந்தது அன்பு. அந்த அன்பின் வெளிப்பாடே மனிதநேயம். அன்பிற்கு நிறமோ, சுயநலமோ கிடையாது. அன்பிற்கு நிகர் அன்பை தவிர வேற எதுவும் இல்லை.

 அன்னை தெரசா, தொழுநோயால் அல்லல்படும் மக்கள் மீது கொண்ட அன்புதான் மனிதநேயம். மனித நேயம் என்ற சொல்லாடல் பழந்தமிழகத்தில் 'ஒப்புரவறிதல்' என்று வழங்கப்பட்டது. வான்புகழ் வள்ளுவன் ஒப்புரவறிதல் என்னும் அதிகாரத்தில் "ஒத்தது அறிபவனே உயிர் வாழ்வான், மற்றவன் இறந்தவனுக்கு ஒப்பாவான்" என்கிறார்.

 சங்கத்தமிழர் வாழ்க்கை அறநெறியின் அடிப்படையிலானது. அறம் என்பது அன்பு என்னும் கதிரவனைப் பின் தொடரும் கார்மேகப் பொதிகளே. அன்பே அறமென்னும் நெறியில் அருள் உள்ளமாய், மாரியாய்ப் பொழிந்து வெற்று உலகை அன்பு உலகமாக அலங்கரிக்கிறது.

மழை பெய்கிறதே! கைம்மாறு கருதியா பெய்கிறது? மரங்கள் காய்களையும் கனிகளையும் நிழலையும் கொடுக்கின்றனவே! கைம்மாறு கருதியா கொடுக்கின்றன? கதிரவனும் காற்றும் மழையும் கடலும் உலகில் உயிர்கள் வாழ்வதற்காக கொடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன.  கைம்மாறு எதையும் எதிர்பார்ப்பதில்லை.

 நமது உடலில் இதயம், நுரையீரல், மூளை என்று பல உள்ளுறுப்புகள் உள்ளன. ஒரு நாள் இதயத்திடம் "காற்றை நான் தரமாட்டேன்" என்று நுரையீரல் சொன்னால் என்ன ஆகும்?

 இதயம் "குருதியைத் தர மாட்டேன்" என்று மூளையிடம் சொன்னால் என்ன ஆகும்?

 உடம்பில் உள்ள உறுப்புகளின் ஒருங்கிணைப்பு இல்லாமல் உடலில் உயிர் நிலைக்காது. அதுபோலதான் இவ்வுலகில் மனித நேயம் தழைக்காமல் உலகம் நிலைக்காது. 

மனிதநேயம் நம் பண்பாட்டின் பெருமை. தமிழ் இனத்தின் தலைசிறந்த அடையாளம். மனிதநேயம் ஓர் ஒப்பற்ற உயர்பண்பு. "இல்வாழ்வின் பயனே அன்பும் அருளும் ஆகிய மனிதநேயமே" என்று வள்ளுவர் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார்.

 மகாத்மா காந்தியிடம் நீங்கள் நாட்டுப் பற்று மிக்கவரா? மனிதநேயமிக்கவரா? என்று கேள்வி கேட்டபோது, அதற்கு காந்தியடிகள் "நான் மொழியால் குஜராத்தியன். நாட்டுப்பற்றால் இந்தியன். ஆனால் அடிப்படையில் நான் மனிதன். நான் குஜராத்தியனாகவோ, இந்தியனாகவோ இருப்பதற்கு அடிப்படைக் காரணம் மனிதநேயமே" என்று பதிலளித்தார்.

 முல்லைக்குத் தேர் தந்தானே பாரி! மயிலுக்குப் போர்வை தந்தானே பேகன்! மதியிழந்தோ மங்காப் புகழ் விரும்பியோ அவ்வாறு செய்யவில்லை! மனத்தின் பால் அன்பு கசிந்ததால் தான் அவ்வாறு செய்தார்கள்.

 பழந்தமிழ் மன்னர்களின் கொடைத் திறனும் ஈகைச் சிறப்பும் மனிதநேயத்தின் நிலைக்கலன்களே!

 வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினார் வள்ளலார். பசிப்பிணி போக்க சத்திய தர்மசாலையை நிறுவி உணவிட்டார். இது மனிதநேயமே. மக்கள் படும் துன்பத்திலிருந்து விடுதலை அடைய வேண்டுமானால் மனிதநேயம் தழைக்க வேண்டும்.

 மனிதநேயம் ஜாதி பார்க்காது. மதம் பார்க்காது. இனம் பார்க்காது. அதிகாரம் பார்க்காது. அத்துணை சமூகத் தடைகளையும் உடைத்தெறியும் ஆற்றல் மனிதநேயத்திற்கு உண்டு.

 அன்னியர் படையெடுப்பாலும் அவர்களின் கலாச்சாரக் கலப்பாலும் நம்முடைய பண்பாடு மெல்ல மெல்ல சீரழிந்து வருவது வேதனை அளிக்கிறது.

 ஊர் தோறும்  சத்திரங்களும் சாவடிகளும் இருந்தனவே! அவையெல்லாம் மனிதநேயத்தின் குறியீடுகள். இன்று ஆதரவற்றோர் இல்லங்கள், காப்பகங்கள் உள்ளனவே! இவையெல்லாம் இன்றைய காலத்து மனிதநேயத்தின் அடையாளங்களே. தொண்டு நிறுவனங்களும் யுனிசெப் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் மனிதநேயத்தின் அடிப்படையில் அல்லல் படும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வருகின்றன. 

"மனிதனாய்ப் பிறந்தோம். மனிதப் பண்பில் சிறப்போம்; மகத்துவங்கள் படைப்போம். எங்கும் மனிதநேயம் மலரட்டும்" என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம்!